tamilSchoolImage
    

காகமும் தண்ணீரும்

ஒரு நாள் ஒரு காகம் உணவு தேடி வெகுதூரம் அலைந்து திரிந்தது. அதனால் அதற்கு மிகுந்த தாகமாக இருந்தது. அதனால் ஒரு மரத்தின் உச்சிக் கிளையில் இருந்து எங்கே தண்ணீர் கிடைக்கும் என சுற்றுமுற்றும் பார்த்தது. அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு வீட்டின் முன்னால் இருந்த தண்ணீர்ப் பானையையொன்றைக் கண்டது. அதிலிருக்கும் தண்ணீரைக் குடிப்பதற்காக ஆவலுடன் அந்த வீட்டை நோக்கிப் பறந்து போய் தண்ணீர்ப் பானையின் மேல் தண்ணீர் குடிக்க அமர்ந்தது.

ஆனால் பானையின் அடியில் மட்டுமே கொஞ்சத் தண்ணீர் இருந்தது. இது காகத்திற்கு குடிப்பதற்கு எட்டவில்லை. கவலையுடன் அடியிலிருக்கும் தண்ணீரை எப்படிக் குடிக்கலாம் என்று யோசித்தது. அதற்கு ஒரு நல்ல யோசனை தட்டுப் பட்டது. உடனடியாக அதைச் செயற்படுத்தத் தொடங்கியது.

பானையின் அருகிலிருந்த சிறு சிறு கற்களைப் பொறுக்கிப் பானையினுள்ளே போட்டது. கற்கள் உள்ளே விழ விழ அடியிலிருந்த தண்ணீர் கொஞ்சங் கொஞ்சமாக மேலே வந்தது. காகத்திற்கு எட்டும் வரை வந்ததும் தண்ணீரைத் தாகம் தீரக் குடித்தது. தனது புத்தியைத் தானே மெச்சிக் கொண்டு பறந்து போனது.

சிந்தித்தால் சித்தி கிட்டும்


    
e-mail: info@ottawatamilschool.org           Ottawa, Canada          www.ottawatamilschool.org